January 20, 2017 தண்டோரா குழு
“ஜல்லிக்கட்டு தொடர்பான விவகாரத்தில் சனிக்கிழமை காலைக்குள் முடிவுக்கு வரும். தமிழர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்” என்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே கூறினார்.
புது தில்லியில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவர் கூறியதாவது:
“பல ஆயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது ஜல்லிக்கட்டு என்பதை ஏற்கிறோம். தமிழகத்தின் பாரம்பரியத்தைக் காக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த முடிவு அறிவிக்கப்படும்.
மேலும், ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் எண்ணம். 2011ம் ஆண்டில் நடந்தது போன்று மீண்டும் தவறு ஏற்படாத வகையில் முடிவு எடுக்கப்படும்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்ட வரைவு நகல் உள்துறை அமைச்சகத்துக்கு வந்துள்ளது. அவசரச் சட்ட வரைவு நகலை உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பும். எனவே, ஜல்லிக்கட்டுப் பிரச்னை வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை முடிவுக்கு வரும்.தமிழர்களின் போராட்டம் பிரமிக்க வைக்கிறது”.
இவ்வாறு அவர் கூறினார்.