January 24, 2017 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தமிழக சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டதால் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த இரு அறிவிப்பாணைகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி அளிக்கும் அறிவிப்பாணையை மத்திய அரசு 2016ம் ஆண்டு வெளியிட்டது. இந்த அறிவிப்பாணை 2011-ம் ஆண்டு காட்சிப்படுத்த தடை செய்யும் விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட அறிவிப்பாணையை மறுதலித்து வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ஆகும்.
தமிழகத்தில் மக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தமிழக அரசால் மத்திய அரசின் ஒப்புதலோடு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் குறித்த சட்ட முன்வடிவை (புதிய நிரந்தர சட்ட மசோதா) தமிழக அரசு சட்டப் பேரவையில் திங்கட்கிழமை நிறைவேற்றியுள்ளது.
இதனை அடுத்து, மத்திய அரசு கொண்டு வந்த இவ்விரு அறிவிப்பாணைகளுக்கும் தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இதனை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.