January 25, 2017 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டுப் போட்டி தடையை நீக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்தச் அவசரச் சட்டத்தை சட்டமாக்கும் வகையிலான சட்டமுன்வடிவு சட்டப் பேரவையில் திங்களன்று (ஜனவரி 24) தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேறியது.
இதற்கு முன் கொண்டுவந்த அவசரச் சட்டத்திலேயே ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்த வகை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதை உறுதி செய்யும் வகையில், சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமும் அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜல்லிக்கட்டுக்கு பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் யாரேனும் வழக்கு தொடர்ந்தால் தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று கோரி, “கேவியட் மனு” தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இது தவிர, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பிலும் 69 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.
இதனால் தமிழக அரசு சார்பில் மீண்டும் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை (ஜனவரி 30) நடைபெறுகிறது.