July 14, 2017 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டு போராட்ட கலவரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு மேலும் 4மாத அவகாசம் கேட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம்,சென்னை மெரினா, கோவை உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டத்தின் முடிவில், கலவரம் வெடித்தது.இதுகுறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கொண்ட ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இவ்விசாரணை காலம் வரும் 31-ம் தேதி நிறைவடையும் நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் சென்னை எம்.ஆர்.சி. நகரில் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
கலவரம் குறித்து தமிழகம் முழுவதும் ஆயிரத்து 1949பேர்வாக்குமூலம் அளித்திருப்பதாகவும், இதுவரை 120 பேரிடம் மட்டுமே விசாரணை நடந்திருப்பதாகவும் கூறினார். மேலும், அனைவரிடமும் விசாரணை நடத்தி முடிக்க ஜூலை 31 வரையிலான காலம் போதாது என்பதால், தமிழக அரசிடம் மேலும் 4 மாதங்கள் அவகாசம் கேட்டிருப்பதாகவும் கலவரம் தொடர்பாக சென்னையில் 516 பேர் புகார் கொடுத்துள்ளனர். ஆகஸ்ட் 15,16ல் கோவையில் விசாரணை நடத்த உள்ளதாகவும் ராஜேஸ்வரன் தெரிவித்தார்.