January 4, 2017 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தி.மு.க. ஆட்சியைப் போல் அ.தி.மு.க. ஆட்சியில் விதிமுறைகளைப் பின்பற்றவும் இல்லை. ஜல்லிக்கட்டையும் நடத்தவில்லை என்று தி.மு.க. செயல் தலைவரும் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
“திமுக ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது” என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம் சாட்டி அறிக்கை விட்டிருந்தார். அதற்குப் பதலிளிக்கும் வகையில் மு.க. ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார்.
திமுக செயல் தலைவராக நியமிக்கப்பட்ட மு.க. ஸ்டாலின் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் புதனன்று சந்தித்துப் பேசினார். பின்னர் அவரைச் சந்தித்த செய்தியாளர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டி குறித்து ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானவை என்று அதிமுக பொதுச் செயலர் சசிகலா புகார் கூறியது குறித்து அறிக்கை குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து திமுக தலைமையிலான தமிழக அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து அதற்கு விதிமுறைகளை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு நடந்தது. ஆனால், அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சியில், உச்ச நீதிமன்றம் கூறிய விதிமுறைகளை திமுகவைப் போல செய்யாமல், விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை இதன் காரணமாகத்தான் அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவில்லை” என்றார்.
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசியது குறித்து விவரித்த மு.க. ஸ்டாலின், “விவசாயிகள் நிலையை விளக்கி சொல்ல முதல்வரை சந்தித்தோம். வடகிழக்கு மழை பொய்த்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்து தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதல்வரை வலியுறுத்தினோம். இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம்” என்று கூறினார்.