January 11, 2017 முஹம்மது ஆசிக்
ஒவ்வோர் ஆண்டும் தைப்பொங்கல் வந்தால் ஜல்லிக்கட்டு என்ற தமிழனின் பாரம்பரிய வீர விளையாட்டின் குரல் ஓங்கி ஒலிக்கும். ஜல்லிக்கட்டு என்பது, தமிழர் கலாசாரத்தின் முக்கிய அம்சம். ஒவ்வொரு இன மக்களுக்கும் ஒரு வீரக் கலாசாரம் இருப்பதுபோல், தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு இருக்கிறது. அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பல ஊர்களில் இதற்காகவே, நாட்டுக் காளைகளை வளர்க்கின்றனர்.
முற்கால தமிழகத்தில், ‘ஏறுதழுவுதல்’ என்கிற பெயரில், ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. ஆண்கள், தங்கள் வீரத்தைப் பறைசாற்றும் வீர விழாவாகவே, ‘ஜல்லிக்கட்டு’ பார்க்கப்பட்டுள்ளது.அக்காலத்தில், காளையை அடக்கும் ஆண்களையே, பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவராகத் தேர்ந்தெடுப்பார்கள். ஏனெனில், “அசுர பலம் கொண்ட காளையை அடக்கிய நான், நிச்சயம் உன்னைத் திருடர்களிடமிருந்தும், காட்டு விலங்குகளிடமிருந்தும் காப்பாற்றுவேன்” என்று ஆண்கள் வீரம் காட்டி, பெண்களை மணம் புரியவைக்கும் ஒரு முக்கிய நிகழ்வுதான் ஜல்லிக்கட்டு.இப்படி ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியத்தோடும், கலாசாரத்தோடும் பின்னிப் பிணைந்ததுள்ளது.
ஜல்லிக்கட்டு வெறும் வீர விளையாட்டாக மட்டும் பார்க்கப்படவில்லை. மாறாக, தமிழக மாட்டினங்களான காங்கேயம், புளியகுளம் போன்றவற்றின் மேம்பட்ட இனப்பெருக்கத்துக்கு ஜல்லிக்கட்டு அடிப்படையாக இருந்தது. ஆம்! போட்டியில் வெற்றி பெறும் காளைகள் உள்ளூர்ப் பசுக்களுடன் இனச் சேர்க்கைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
அதைப் போல் கிராமங்களில் கோயில் காளைகள் இலவசமாக இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டில் இயல்பாக வெற்றிபெறுபவை மரபணுரீதியில் வீரியம் மிக்க காளைகளே. இதன் மூலம் உள்ளூர் மாட்டினங்களின் மரபணு வளம் பராமரிக்கப்படுகிறது. வீரியம் மிக்க காளைகளின் குட்டிகளையே விவசாயிகளும் அதிகம் விரும்புகிறார்கள்.
இப்படி பாரம்பரியமாக தமிழனால் வீரவிளையாட்டாகக் கருதப்பட்டு வந்த ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2008ம் ஆண்டு முதல் பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் மூலம் எதிர்ப்புகள் வருகின்றன.
எனினும், ”தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்கு முறைச் சட்டத்தை (2009)” கொண்டுவந்தது தமிழக அரசு. ஒவ்வொரு முறையும் ஒரு சில கட்டுப்பாடுகளோடு ஜல்லிக்கட்டு நடைபெற்றன.
ஆனால், 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பிராணிகள் நல வாரியம் மற்றும் சில அமைப்புகள், பல்வேறு இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் கணொளியாகவும் புகைப்படங்களாகவும் பதிவு செய்து, காளைகளுக்குக் கொடுமை இழைக்கப்பட்டது போல் காட்சிப் பதிவுகளை நீதிமன்றத்தில் ஆதாரமாகக் காட்டின.
அதையடுத்து உச்ச நீதிமன்றம் 2014ம் ஆண்டு மே மாதம் 7 ம் தேதி ‘ஜல்லிக்கட்டை’ தடை செய்தது. மேலும் தமிழக அரசின் ”தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” சட்டத்தை நீக்கியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இரண்டு வருடங்களாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.
மாடுகளைச் செல்வமாகப் போற்றி அழைத்த சமூகம் தமிழ்ச் சமுதாயம். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் வீரன் மாட்டை அடித்து துன்புறுத்துவதெல்லாம் கிடையாது என்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஒருபுறம் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், மறுபுறம் ஜல்லிகட்டு காட்டுமிராண்டித்தனம் என்றும் அதில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்றும் பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் குரல் கொடுத்து வருகிறது. எனினும், விலங்குகள் நல அமைப்புகள் கூறும் கருத்திற்குகே உச்ச நீதிமன்றமும் முன்னுரிமை அளித்துள்ளது.
அப்படியென்றால் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டா அல்லது காட்டு மிராண்டித்தனமா? இதோ சிலரது பார்வையில்….
ஜீவானந்தம் (பள்ளி ஆசிரியர்):
என் பார்வையில் ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனம் என்றால் நாம் அனைவருமே ஏதோ ஓர் வகையில் காட்டுமிராண்டிகள்தான். காளைகளை அடக்குவது காட்டுமிராண்டித்தனம் என்றால் கோவிலில் இருக்கும் யானைகளையும், யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதையும் என்ன சொல்லுவது? அந்த வகையில் பாரம்பரியமாக நடத்தப்படும் ஓர் விளையாட்டைச் சில குறிப்பிட்ட நோக்கத்தோடு தடை செய்வது என்பது வருந்த வேண்டிய ஒன்று.
பார்த்துப் பார்த்து காளைகளைப் பராமரிப்பவனை விடவுமா விலங்குகள் நல அமைப்பும், உச்ச நீதிமன்றமும் காளைகள் மீது அக்கறை செலுத்தப் போகின்றன?
“ஓர் இனத்தை அழிக்க வேண்டுமா? அம்மக்களை அழிக்ககத் தேவையில்லை. மாறாக, அவர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழித்தால், அந்த இனம் தானாகவே மறைந்துபோகும்” என்பது ஆதிக்க சக்திகளின் குறிக்கோள்.
வசந்தி (இல்லத்தரசி)
ஜல்லிக்கட்டு விளையாட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தில் இருந்து விளையாடிய வீர விளையாட்டு. அந்தக் காலத்தில் தமிழனிடம் ஒரு பழக்கம் இருந்தது. காளையை அடக்குபவனுக்கும், அதிக எடையுள்ள பாறாங்கல்லைத் தூக்குபவனுக்கும்தான் தனது பெண்ணை மணமுடித்துத் தருவது என்ற வழக்கம் இருந்தது. அதில், ஓர் ஆண்மகன் தனது வீரத்தை நிரூபிப்பதற்காக விளையாடிய ஜல்லிகட்டை இப்போது ஏதோ மிருகவதை என்று கூறித் தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒவ்வொரு விலங்குக்கும் ஓர் அடையாளம் உள்ளது. அப்படி காளையின் அடையாளம்தான் ஜல்லிக்கட்டு. இதனால் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிகட்டை நடத்த அனுமதிக்க வேண்டும்.
விஷாலி (கல்லூரி மாணவி)
ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடத்தப்படவேண்டும். ஏனெனில், அதன் முக்கிய நோக்கமே வீரியமான காளை எது என்று பார்த்து அதை இனச்சேர்க்கைக்கு விடுவதுதான். இதன் மூலம் உள்ளூர் மாட்டினங்களின் மரபணு வளம் பராமரிக்கப்படுகிறது. ஆகையால், ஜல்லிக்கட்டைத் தடைசெய்வதன் மூலம் பால் உற்பத்தியில் நாம் பின் தங்கிவிடுவோம்.
இப்படி பல நூற்றாண்டு காலமாக தமிழனின் பாரம்பரியமாக இருந்து வரும் ஜல்லிக்கட்டைத் தடை செய்வது முட்டாள்தனம். இது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு தமிழனும் ஜல்லிக்கட்டைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ராகுல் (தனியார் நிறுவன மேலாளர் )
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுதான் இதில் என்ன சந்தேகம்? ஜல்லிக்கட்டு களத்தில் செருப்பு கூட அணியாமல் மாட்டைத் தெய்வமாக பாவித்து அலங்காரம் செய்து களத்தில் இறக்கி விடுவார்கள். அதை தன்னம்பிக்கையும் தைரியம் மிக்க ஆண் சிங்கங்கள் அடக்குவார்கள். மாடுகளை அடக்கும் தருணத்தில் இளைஞர்களிடையே ஒற்றுமை, சுயக் கட்டுப்பாடு, ஆளுமை, பண்பு, தைரியம், விவேக தன்மை ஆகிய சிறப்பு அம்சங்கள் மேம்படும். அதையெல்லாம் கொண்டு அமைந்ததது நமது ஜல்லிக்கட்டு. இது வெறும் விளையாட்டு மட்டும் அல்ல. நம் கலாசார அடையாளத்தில் முக்கிய அம்சமாகும்.
வைஷ்ணவி கார்த்திகேயன் (பயிற்சிச் செயலர் )
ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் குறுகிய மனப்பான்மையில் மட்டும் பார்க்க கூடாது. கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் அது மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையே உள்ள ஒரு நல்ல கலை வடிவம் என்பது புரியும்.
ஜல்லிக்கட்டைத் தடை செய்வதன் மூலம் மாடுகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால், நம் ஊரில் உள்ளூர் இனக் காளைகள் அழியும். இது போன்று சிறு வயதிலிருந்தே மாடுகளைத் தொட்டு பழகும் பட்சத்தில் இளைஞர்கள் விவசாயத்திற்கு வரவும் வாய்ப்புள்ளது.
ஏற்கனவே, நம் கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. இது போன்ற ஜல்லிக்கட்டைத் தடை செய்தால் அது முற்றிலும் அழிந்துவிடும்.
சாந்தி (இல்லத்தரசி)
ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரத்தை மட்டுமல்ல. நாம் வளர்க்கும் நமது நண்பனான காளையின் வீரத்தையும் பறைசாற்றும் பாரம்பரிய விளையாட்டு. அதை இழப்பது தமிழர்களின் பாரம்பரியத்திற்கு தலைகுனிவே.
கோழி வளர்ப்பது முட்டைக்காகவும் பசுவின் மடி பாலுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்றால் காளையின் வீரம் ஜல்லிக்கட்டுக்காக என்பதும் தவறில்லை. ஜல்லிக்கட்டு நம் அடையாளம், அதைத் தொலைத்து அகதிகளாக வாழ்வதில் அர்த்தமில்லை. ஆகையால், அந்நியரின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் நமது வீர விளையாட்டின் அங்கீகாரத்தை இருகரம் நீட்டி வரவேற்க் காத்திருக்கும் தமிழர்களில் நானும் இணைத்திருப்பதில் மகிழ்ச்சியே.
இப்படி தமிழினின் வீரத்திலும் உணர்விலும் கலந்து இருக்கும் ஜல்லிக்கட்டை இந்த வருடமாவது உச்ச நீதிமன்றம் அனுமதித்து வாடிவாசல் எப்போது திறக்கும் என்றும் காத்திருக்கிறார்கள் வீரத் தமிழர்கள்.