October 30, 2021 தண்டோரா குழு
நடப்பாண்டில் கடந்த ஆறு மாதங்களாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கட்டுமான பொருட்களின் அளவில்லாத விலை உயர்வு ஏற்பட்டதால், கட்டுமான கட்டணமும் உயர்ந்துள்ளது. சிமென்ட் விலை கடந்த ஆண்டு மார்ச்சில் 280 – 300 ரூபாய் மேல் உயர்ந்து, 480 – 520 ஆக உள்ளது. இதே போன்று, ஸ்டீல் விலை டன் ஒன்றுக்கு 42,000.00 ரூபாயிலிருந்து 76,000.00 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டில், வீட்டு பயன்பாட்டு பொருட்கள் ஹார்ட்வேர், சானிட்டரி, எலக்ட்ரிக், பிவிசி போன்றவைகளின் விலையும் 30 – 50 சதம் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது.
இது குறித்து கிரெடாய் கோவை கிளையின் தலைவர் குகன் இளங்கோ கூறுகையில்,
“பொருட்களின் விலை உயர்வால், கட்டுமானத்தின் விலையும் சதுர அடிக்கு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கட்டுமான தொழில் செய்வோர், ரியல் எஸ்டேட் மேம்படுத்துவோருக்கு இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் பலர் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தினருக்கு ஏற்ற குறைந்த விலையில் உள்ள வீடுகளை கட்டி தருகிறார்கள், நீண்ட காலமாக கோவிட் பாதிப்பால் முடங்கி கிடந்த கட்டிட தொழில், தலைதூக்கும் இந்த சமயத்தில் விலை உயர்வு, மீண்டும் ஒரு சரிவை ஏற்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.கட்டுமான தொழில் இருப்போருக்கு தற்போதைய ஜிஎஸ்டி விதிகளின்படி, மூலப்பொருட்கள் மீதான வரியை திரும்ப பெற அனுமதி இல்லை. இது குறித்து கிரெடாய் செயலாளர் ராஜிவ் ராமசாமி கூறுகையில், “ஜிஎஸ்டி வரியை கட்டுமான நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற முடியாது (No Input Credit) என்பதால், ரியல் எஸ்டேட் துறைக்கு இது வரிமேல் வரியாக மாறியுள்ளது. கட்டுமான தொழிலில் ஜிஎஸ்டி வரியாக மட்டும் சதுரடிக்கு 220 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது.
எனவே செலுத்திய வரியை திரும்ப பெறும் வசதியை மீண்டும் அளித்து, ரியல் எஸ்டேட் தொழிலை காப்பதோடு, அனைவருக்கும் குறைந்த விலையில் வீடு என்ற இலக்கை அடைய உதவ வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். அதோடு, மூலப்பொருட்களின் விலை உயர்வையும் கட்டுப்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம்.
மேலும், விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு தரும் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.