August 21, 2017 தண்டோரா குழு
ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி அமல் தொடர்பாக மத்திய அரசு விவாதங்களை ஆரம்பிக்கும்போதே தமிழில் அது தொடர்பான உரையாடல்களை நிகழ்த்தியவர்களில் முக்கியமானவர் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்.
ஆடிட்டராக, தொழில் முனைவோராக இருக்கும் இவர் பல்வேறு கோணங்களில் ஜி.எஸ்.டி வரி விதிப்பை அணுகி எழுதியிருக்கும் நூல் ‘ஜி.எஸ்.டி: ஒரே நாடு ஒரே வரி’. படித்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை மிக எளிதாக ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை குறித்து இந்நூலில் அலசப்பட்டுள்ளது.
இந்நூலில் ஜி.எஸ்.டி என்றால் என்ன, இவ்வரி விதிப்பு முறையின் வரலாறு, சாதக பாதக அம்சங்கள், உற்பத்தி சேவை ஏற்றுமதி இறக்குமதி சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஜி.எஸ்.டியினால் உண்டாகக் கூடிய விளைவுகள், பதிவு செய்யும் முறை, வரித்தாக்கல் செய்யும் முறை, நீண்ட கால நோக்கில் ஜி.எஸ்.டியினால் விளையக்கூடிய பயன்கள் என அனைத்தும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளன.
மேலும், முற்றிலும் புதிய வரி விதிப்பினால் தொழில் துறையின் அனைத்து அடுக்குகளிலும் அச்சமும் குழப்பமும் நிலவி வரும் சூழலில், இந்நூல் அனைத்து விதமான குழப்பங்களையும் தீர்க்கும் கையேடாக இந்நூல் வெளிவந்துள்ளது. செய்ய வேண்டியதையும், தவிர்க்க வேண்டியதையும் ஒரு ஆடிட்டருக்கேயுரிய அனுபவமொழியுடனும், வழிகாட்டுதலுடன் விளக்குகிறது இந்நூல். தொழிற் துறையினர் மட்டுமல்லாது. சிறுகுறு வணிகர்களும் கூட வாசித்துப் பயனடைய வேண்டிய நூல் அமைத்துள்ளது.