February 25, 2023 தண்டோரா குழு
கோவையின் ஓர் புதிய அடையாளமாக ஜி டி நாயுடு வளாகத்தில் “எக்ஸ்பிரிமெண்டா அறிவியல் மையம்” பிப்ரவரி 28-ல் துவக்கப்படவுள்ளது.
இது குறித்து ஜி. டி. நாயுடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி டி கோபால், அறங்காவலர் அகிலா சண்முகம், பொது மேலாளர் சுரேஷ் நாயுடு ஆகியோர் கூறியதாவது :-
கோயம்புத்தூரில் 1950-ம் ஆண்டு ஜி டி நாயுடு அறக்கட்டளையை மறைந்த ஜி டி நாயுடு ஏற்படுத்தினார். இதன் கீழ் ஜி டி அறிவியல் அருங்காட்சியகம், ஜி டி கார் மியூசியம் போன்றவை செயல் பட்டு வருகின்றன. பொதுமக்களும் மாணவர்களும் பல ஆண்டுகளாக இதனை பார்வையிட்டு பயனடைந்தது வருகின்றனர்.
ஜி டி நாயுடு அறக்கட்டளை தற்போது ‘எக்ஸ்பிரிமெண்டா” என்ற புதிய கலந்தாய்வு அறிவியல் மையத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மையத்தின் நோக்கம்,குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி, பயிற்சியாகவும், பொழுதுபோக்காகவும், எளிமையாக கற்றுக்கொள்ள வைப்பதாகும்.
அறிவியல் மையத்தை 2023 பிப்ரவரி 28, அன்று, தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைக்கிறார்.
மேலும் விழாவில் சென்னை,ஜெர்மன் தூதராக அதிகாரி மைக்கேலா குச்லேர்,கௌரவ விருந்தினராக பங்கேற்கிறார். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பதி மற்றும் கோவை பாரதிய வித்யா பவன், தலைவர் டாக்டர் பி. கே. கிருஷ்ணராஜ் வானவராயர் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இந்த அறிவியல் மையம் 40,000 சதுர அடியில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கு இணையான 120 க்கும் மேற்பட்ட கலந்தாய்வு அறிவியல் பரிசோதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தை மாணவர்கள் எளிதாக அணுகி கற்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. சிறந்த அறிவியல் கல்வி அனுபவத்தை தொட்டு, உணர்ந்து கற்கும் வகையில் உள்ளன. இந்த மையத்தில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லாத தகவல்கள், அவற்றை குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் விளக்க அறிவியல் தகவல் தொடர்பாளர்கள் உள்ளனர்.
சர்வதேச அளவில் உள்ள அறிவியல் பரிசோதனைகளை மிகவும் கவனமுடன் தேர்வ செய்து இங்கு இடம் பெறச் செய்யப்பட்டுள்ளது. வேகம், ஒலி, ஒலி மாயபிம்பம், ஆடிகள், கணிதம், இயற்கை, இயந்திரவியல், ஆற்றலும் சக்தியும், ஒளியும் வண்ணங்களும் என பல்வேறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளியில் அணி அணியாய் வரும் மாணவர்கள், குழுக்களாக வரும் பொது பார்வையாளர்களுக்கு தேவையான நேரம் ஒதுக்கி விளக்கம் தர வழிகாட்டிகள் உள்ளனர். இந்த அறிவியல் மையத்தில் ஸ்டெம் எனப்படும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித பாடங்களுக்கான செயல்முறை ஆய்வகம், இயற்பியல், ரோபோடிக் மற்றும் உருவாக்குபவர்களுக்கான தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. தனியார், அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், செயல்முறை விளக்கத்தால் அறிவியல் பற்றி அறிவதோடு, தரமான அறிவியல் ஆலோசகர்களும் உதவி வருகின்றனர்.
எக்ஸ்பெரிமெண்டா அறிவியல் மையம், முதன்மை கட்டடத்தில் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ளது. சரிவு பாதை மற்றும் லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. காற்றோட்டமான, வசதியாக இருப்பதால், சிறப்பான அனுபவத்தை பார்வையாளர்கள் பெறுவர்.
எக்ஸ்பெரிமெண்டா அறிவியல் மையம் வரும் மார்ச் 1 முதல் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. காலை 9.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை மையத்தை பார்வையிடலாம். திங்கள் கிழமைகள், தேசிய விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் இந்த மையம் திறந்திருக்கும். அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும், பிற தனிநபர்களுக்கும் சிறப்பு தள்ளுபடி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றனர்.