February 21, 2023 தண்டோரா குழு
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நிதி திரட்டும் வகையில்
ஜெம் அறக்கட்டளை சார்பாக மகளிருக்கான மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஜெம் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேல் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் ஜெம் மருத்துவமனையின் அமைப்பான ஜெம் அறக்கட்டளையின் சார்பாக கோவையில் மகளிர்க்கான மாரத்தான் போட்டி வரும் பிப்ரவரி 25ஆம் தேதி வ.உ.சி மைதானத்தில் இரவு நேரத்தில் நடைபெற உள்ளது.
இது தமிழ்நாடு தடகள சங்கத்தின் அங்கீகாரம் பெற்று, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் விதமாக நிதி திரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த மகளிருக்கான மாரத்தான் போட்டி மாலை 6 மணிக்கு தொடங்கி 3 கிமீ, 5 கிமீ, 10 கிமீ மற்றும் 21 கிமீ என நான்கு பிரிவுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்விற்கு 3500 க்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்துள்ளனர்.
ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சிகள் கொண்டாட்டம் ஓட்டத்திற்குப் பிறகு இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் ரோட்டரி கிளப் மற்றும் மெட்ரோபோலிஸ் அமைப்பின் மூலம் 100 நோயாளிகளுக்கு சுமார் 3 கோடி மதிப்பிலான அறுவைசிகிச்சைகள் ஜெம் மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிவித்தார்.