February 4, 2025 தண்டோரா குழு
2025 ஆம் ஆண்டின் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,லாப்ரோஸ்கோப்பி துறையில் உலக அளவில் தனித்துவம் கொண்ட மையமாகவும்,வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கான நவீன தீர்வுகளை வழங்கக் கூடிய இந்தியாவின் முன்னணி சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்கும் கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்தியேக ஆதரவு குழு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான நம்பகத்தன்மையான தகவல்களை பெற சிறப்பு உதவி எண் (9994901000) ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த குழு மற்றும் உதவி எண்ணை கோவை மாநகர காவல்துறை ஆணையர் சரவண சுந்தர், ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு,தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் பி.பிரவீன் ராஜ், பெருங்குடல் அறுவை சிகிச்சைத் தலைவர் டாக்டர் ராஜபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்தார்.
பெருங்குடல் புற்றுநோய்க்கு ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இந்த நோயை வென்ற மக்களுடன் இணைந்து இந்த ஆதரவுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வித புற்றுநோய் குறித்தும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தம் ஒருவர் எளிதில் அறிந்துகொள்ள முடியும். இந்த குழு மூலம் இந்த நோய்க்காக சிகிச்சை பெறுபவர்களுக்கு மன ஆதரவை, சரியான தகவல்களையும், நம்பிக்கையை வழங்குவதுவே இதன் முக்கிய குறிக்கோள்.
அதே போல பெருங்குடல் புற்றுநோய் சிறப்பு உதவி எண் மூலம் இந்த வகை புற்றுநோயின் தடுப்பு நடவடிக்கைகள், இதற்கான பரிசோதனை, சிகிச்சை வழிமுறைகள், சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு மற்றும் உளவியல் ஆதரவு குறித்த வழிகாட்டுதல்கள் வழங்குப்படவுள்ளது.
டாக்டர் பழனிவேலு இந்த அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் முன்னர் பெருங்குடல் புற்றுநோய் பற்றி பேசுகையில்:
இந்த வகை புற்றுநோய் (Colorectal Cancer – CRC) உலகளவில் மூன்றாவது பொதுவான புற்றுநோயாக உள்ளது எனவும், இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கிறது எனவும், இதனால் ஏற்படும் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது எனவும் கூறினார்.
வளர்ந்த நாடுகளில், பெருங்குடல் புற்றுநோயால் சிறந்த முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை ஆகியவை காரணமாக இதனால் ஏற்படும் இறப்பு விகிதங்கள் குறைந்துள்ளன என கூறிய அவர்,இந்தியாவில் இதுகுறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது என்றார்.ஒருவருக்கு இந்த நோய் உள்ளது தாமதமாக கண்டறியப்படுவது ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது எனவும் இந்த பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 40-50% பேர் நோய் முற்றிய நிலையில் தான் அவர்களுக்கு இருப்பது குறித்து அறிந்துகொள்கின்றனர் என கூறினார்.
அவருக்கு அடுத்து பேசிய ஜெம் மருத்துவமனையின் பெருங்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவரான டாக்டர் ராஜபாண்டியன்,விழிப்புணர்வுடன் முன்னெச்சரிக்கையாக இருப்பதே சிறந்தது என்பதால், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொலோனோஸ்கோபி பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பெருங்குடல் புற்றுநோய் பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமல் உருவாகிறது. ஆகையால் சரியான காலத்தில் பரிசோதனைகள் செய்து கொள்வதன் மூலம் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால், அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது மிக தீவிர சிகிச்சைகளின் தேவை இருக்காது அதே சமயம் சிறந்த பலன்களை எளிய சிகிச்சைகள் மூலமாகவே பெற முடியும். எனவே புற்றுநோய்கள் போன்ற உயிருக்கு ஆபத்தான அணைத்து நோய்கள் குறித்த விழிப்புணர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
அவருக்கு அடுத்து பேசிய ஜெம் மருத்துவமனையின் ரோபோடிக் பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹரிஷ் 32 ஆண்டுகளுக்கும் மேலாக பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சையில் இந்த மருத்துவமனை முன்னோடியாக விளங்குவதாக கூறினார். மேலும் அவர் ஜெம் மருத்துவமனையில் வழங்கப்படும் பெருங்குடல் புற்றுநோய்க்கான பல்வேறு நவீன சிகிச்சைகள் பற்றி பேசினார்.இந்த நோய்க்கான சிகிச்சைகளில் இம்மருத்துவமனை சிறந்து விளங்குவதாக கூறிய அவர், இதுவரை இங்கு 5000க்கும் மேற்பட்ட லேப்ராஸ்கோபிக் கோலெக்டோமிகள், 2500 LAP எனும் அறுவை சிகிச்சைகள், 220 LAP TPC+IPAA மற்றும் 230 LAP ISR ஆகிய சிகிச்சைகளை சிறப்பாக செய்துள்ளதாக பதிவு செய்தார்.
இந்த நிகழ்வில் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. காவல் ஆணையர் உடன் இனைந்து டாக்டர் பழனிவேலு இந்த விருதுகளை வழங்கி அவர்களை வாழ்த்தினார். பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கையின் ஒரு பகுதியாக, ஜெம் மருத்துவமனை மாவட்டங்கள் முழுவதும் பரிசோதனை திட்டங்கள் மற்றும் மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மற்றும் டாக்டர் சத்தியமூர்த்தி, டாக்டர் சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.