January 6, 2017 தண்டோரா குழு
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளபடி செய்தது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டதாவது:
ஜெயலலிதா திரைப்படத் துறையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பல விருதுகளைப் பெற்றுள்ளார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு, தமிழக முதல் அமைச்சராகப் பதவி வகித்தார்.
அம்மா உணவகம், அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு வெள்ளிக்கிழமை காலையில் தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “யார் யாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்த நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்கள்.
“இது போன்ற வழக்குகளை விசாரணைக்கு ஏற்க முடியாது” என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.