December 29, 2016 தண்டோரா குழு
“தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவால் தமிழக முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல், நுரையீரல் தொற்று போன்றவற்றுக்குச் சிக்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் தொடர்ந்து உடல் நலம் தேறி வருகிறார் என மருத்துவமனை சார்பாக அறிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில் டிசம்பர் 5ம் தேதி இரவு11:30 மணிக்கு ஜெயலலிதா மாரடைப்பால் மரணமடைந்தார். அதனை அடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை வந்தது.
இது குறித்து நீதிபதி வைத்தியநாதன் கூறுகையில்,
” ஜெயலலிதா மரணத்தில் எனக்குச் சந்தேகம் உள்ளது. ‛அவர் குணமடைந்து வருகிறார், உணவு சாப்பிடுகிறார், நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்’ என செய்திகள் வெளியாயின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தது எப்படி? அவரைப் பார்க்க அவரது உறவினர்களை ஏன் அனுமதிக்கவில்லை? ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை? இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்படுகிறது” என்றார் நீதிபதி வைத்தியநாதன்