December 20, 2016 தண்டோரா குழு
கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு, தமிழக அரசின் ரூ. 2௦௦௦௦ நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறந்த இடமான ஜெருசலேம் நகருக்கு புனிதப் பயணம் செல்வது வழக்கம். தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல தமிழக அரசாங்கத்தால் நபர் ஒருவருக்கு ரூ 2௦,௦௦௦ நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று சென்னையில் உள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பட வேண்டும்.
இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாளாக 16.12.2016 அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த காலக்கெடு 30.12.2016 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” கோவை மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து கிறிஸ்தவர்களும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி, 2016-17 ம் ஆண்டிற்கான ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொள்ளுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டு இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.