June 23, 2017 தண்டோரா குழு
ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி டபிள்யூடபிள்யூஇ (WWE) எனப்படும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சிறுவர் முதல் பெரியவர்கள் முதல் அனைவரும் விரும்பி பார்க்கும் டபிள்யூடபிள்யூஇ (WWE) எனப்படும் மல்யுத்த போட்டி உலக அளவில் புகழ் பெற்றது. இப்போட்டியில் இந்தியாவில் இருந்து கிரேட் காளி மற்றும் ஜிந்தர் மஹால் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். எனினும், பெண்கள் பிரிவில் இது வரை ஒரு இந்திய பெண்ணும் இதில் கலந்து கொண்டது கிடையாது.
இந்நிலையில், துபாயில் அடுத்தமாதம் நடைபெறும் பெண்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் மல்யுத்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த கவிதா தேவி பங்கேற்பதை டபிள்யூடபிள்யூஇ நிறுவனம் உறுதி செய்துள்ளது.
முன்னாள் பளுதூக்கு வீராங்கனையான கவிதாதேவி, இதற்காக கடந்த ஏப்ரலில் நடத்தப்பட்ட முதற்கட்ட போட்டியில் பங்கேற்றார். அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நடுவர்களின் நன்மதிப்பையும் பெற்றள்ளார். இதனால் பெண்களுக்கென பிரத்யேகமாக நடத்தப்படும் துபாய் ட்ரை அவுட் தொடரின் ’Mae Young’ பிரிவில் போட்டியிட தகுதி பெற்றுள்ளார்.
ஏற்கனவே WWE போட்டியில் பங்கேற்றுள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிரேட்காளியின் பயிற்சி மையத்தில் கவிதா பயிற்சி பெற்றவர்.இதுமட்டுமின்றி அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்தாண்டு நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற கவிதா, அந்த போட்டியில் தங்க பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.