May 8, 2017 தண்டோரா குழு
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூட உச்சநீதிமன்றம் உத்தவிட்டதை தொடர்ந்து அரசு புதிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஆங்காங்கே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.திருப்பூர், திருவண்ணாமலை, சேலம், கரூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் கடைக்கு எதிராக அமைதியாக மக்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கிராம சபையில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றினால் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தது.