December 24, 2016 A.T.ஜாகர்
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி வணிக வளாகத்தில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி வணிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அங்குள்ள மதுபானக் கடையினால், பெண்களும், பொதுமக்களும், வணிகர்களும், மாணவர்களும் பெரிதும் இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்றும், வணிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குச் சொந்தமாக இந்திரா காந்தி வணிக வளாகம் உள்ளது. அந்த வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பெண்களும்,பள்ளி, கல்லூரி மாணவ/ மாணவிகள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்லும் இடமாக வணிக வளாகம் உள்ளது.
தமிழக அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் கடை எண் 1636 மதுபானக் கடையும் அதே இந்திரா காந்தி வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. வணிக வளாகத்தைச் சுற்றி பேருந்து நிலையம், வாரச் சந்தை, மாரியம்மன் கோவில், மசூதி, காவல்நிலையம், பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன. அங்கு உள்ள மதுபானக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களால் மாணவர்களும், வணிகர்களும், பெண்களும், பொதுமக்களும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
மதுபானக் கடையால் வணிக வளாகம் முழுவதும் குடிகாரர்களின் இடமாகக் காட்சியளிக்கின்றன. மது அருந்தி விட்டு கடைகள் முன்பு குடிகாரர்கள் படுத்துறங்குவதும், மதுப் பாட்டில்களை ஆங்காங்கே உடைத்து விட்டுச் செல்வதும், வாந்தி எடுப்பதும், வணிக வளாகத்தில் இருபக்கம் உள்ள மாடிப் படிகளில் வணிகர்களும் கடைக்கு வரும் பொதுமக்களும் நடக்க முடியாத அளவுக்குத் தொல்லைகள் கொடுப்பதும் வழக்கமாக இருக்கிறது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நா. பாலமூர்த்தி கூறுகையில், “இங்குள்ள மதுபானக் கடையால் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. வணிகர்கள் இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அருகில் உள்ள வாரச் சந்தையில் இரவு நேரங்களில் மதுபானக் கடையால் அது பாராக செயல்படுகிறது. காவல் துறையினர் அதனைக் கண்டுகொள்வதில்லை. மது அருந்திய நிலையில் பெண்களிடம் ரகளை செய்கின்றனர்,
இந்த மதுபானக் கடையை மாற்றக் கோரி பல போராட்டங்கள் நடத்தியும் எந்தப் பயனும் இல்லை. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மதுக்கடையை மாற்ற உத்தரவு பிறப்பித்தும் தற்போது வரை மதுபானக்கடை அப்புறப்படுத்தப் படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய நெடுஞ்சாலை அருகே 100 மீட்டர் தொலைவில் மதுபானக் கடைகள் செயல்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது . ஆனால், இங்குள்ள மதுபானக் கடை தேசிய நெடுஞ்சாலை எண் 67 அருகே 60 மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது.
மேலும் பெரியநாயக்கன் பாளையம் அருள்மிகு மாரியம்மன் கோவில் நிலத்தில்தான் இந்திரா காந்தி வணிக வளாகம் அமைந்துள்ளது. கோவில் நிலத்தில் மதுபானக் கடை செயல்பட்டு வருவதற்கு பக்தர்களும் அத்திருப்தி தெரிவித்துள்ளனர்.
2012 ம் ஆண்டு அனைத்துக் கட்சியினர், வணிகர்கள், பொதுநல அமைப்புகளின் நீர்வாகிகள் கலந்து கொண்ட பேரூராட்சிக் கூட்டத்தில் ஒரு மனதாக மதுபானக் கடையை அப்புறப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின் மதுபானக் கடையை எல்.எம்.டபிள்யூ. பகுதியில் மாற்ற இடம் பார்க்கப்பட்டது. அங்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அதுவும் கைவிடப்பட்டது.
இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி தலைவர் வி. சந்திரன் கூறுகையில், “பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக் கடையை மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் பேரூராட்சி மேற்கொண்டுவருகிறது. கோவை வடக்கு மாவட்ட சட்டப் பேரவை உறுப்பினரிடமும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்கப்பட்டது.
தமிழக அரசு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 500 மதுக்கடைகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது . அதில் இந்த மதுக்கடையும் இடம்பெற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்றார்.
வணிகர்களுக்கும் , பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள மதுப்பானக் கடையை அகற்ற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பொதுக் கருத்து.