November 14, 2022 தண்டோரா குழு
டிஜே அகாடமி ஆப் டிசைன் கல்லூரியின் 8 வது பட்டமளிப்பு விழா ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த ஆண்டு 65 மாணவர்கள், அவர்களது டிப்ளமோ பெற்றுக் கொண்டனர்.
டிஜே அகாடமி ஆப் டிசைன் கல்லூரியின் நிர்வாக குழு தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு தலைமை வகித்தார்.அதுல் கேடியா, டீன் டிஜே அகாடமி ஆஃப் டிசைன்,கல்லூரியின் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.தலைமை விருந்தினராக புகழ்பெற்ற கட்டடக் கலைஞரும், யேல் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியும், பெங்களூரைச் சேர்ந்த கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு ஸ்டூடியோவான கலெக்டிவ் ப்ராஜெக்ட் நிறுவனத்தின் திரு. சைரஸ் பட்டேல், கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
சஞ்சய் ஜெயவர்த்தனவேலு பட்டதாரிகளுக்கு ஆற்றிய உரையில்,
யதார்த்தத்துடன் தாங்கள் பெற்ற கல்வி அறிவை உபயோகிக்க வேண்டும் எனவும், அவர்கள் தொடர்ச்சியாக தங்களின் அறிவுத்திறனை புதுப்பித்துக் கொண்டு தொடர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.”உங்களுக்கு என, உங்கள் குடும்பம் மற்றும் சமுதாயத்திற்கென ஒரு தொலைநோக்கு பார்வையை அமைத்து கொள்ளுங்கள்.அவற்றை அடைய தெளிவான திட்டத்தை வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு மாற்று திட்டத்தையும் வைத்துக்கொண்டு அதை அடைய உழைத்திடுங்கள்,” என்று கூறினார்.
பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர் சைரஸ் பட்டேல்,
தனது உரையில் பட்டதாரிகள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலிலும்,அவர்களுடைய வாழ்க்கையிலும் சிறந்திட நிதானமாகவும் விவேகமாகவும் செயல்பட வேண்டும் என்று கூறினார்.அவ்வாறு சிறந்திட சில காலம் ஆனாலும் அதை பொறுமையுடன்
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். “உங்கள் பயணத்தின் ஆரம்ப கட்ட ஆண்டுகளில் மிக கடுமையாக உழைத்திடுங்கள். உங்களுக்கென்று தனி அடையாளத்தை நற்பண்புகளோடு உருவாக்க முயலுங்கள்,” என்றார்.
மேலும் அவர் அவர்களை சமுதாயத்திலும் தொழிலிலும் நல்ல பெயர் உள்ளவர்களாக உருவாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவ்வாறு நல்ல பெயர் உடையவர்களாக இருப்பதே பிற்காலத்தில் அவர்களுடைய விலைமதிப்பில்லா சொத்தாக கருதப்படும் என்றார்.இதை தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டங்களை சஞ்சய் ஜெயவர்த்தனவேலு அவர்களுடன் இனைந்து வழங்கினார்