January 25, 2017 தண்டோரா குழு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பின் தொலைபேசி வாயிலாகப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் உரையாற்றினார்.
அந்த உரையாடல் குறித்து தனது “டிவிட்டர்” பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி அதிபர் டிரம்ப்புக்கு இவ்வாறு அழைப்பு விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் சிறப்பாக அமைந்தது என்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்தும் உரையாடல் அமைந்திருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உரையாடலில் வர்த்தகம், பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை பலப்படுத்துவது குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் பேசியதாகவும் அந்த டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது, பல்வேறு சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்காவும் இந்தியாவும் தோழமையுடன் செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
பிரதமருக்கு அழைப்பு: இந்த தொலைபேசி உரையாடலில் அமெரிக்காவிற்கு வருமாறு நரேந்திர மோடிக்கு, டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார் என்றும் மோடியின் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.