October 12, 2023 தண்டோரா குழு
உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு கோவை ஆர். ஏஸ். புரம் தபால் நிலையம் அருகில் அமைந்துள்ள டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை மற்றும் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை இணைந்து நடத்தும் காவல் துறை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இன்று (12.10.2023) முதல் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாமை நடத்துகின்றது.
இதில் கலந்து கொள்ளும் கோவை மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் இலவச கண் பரிசோதனை,கண் கண்ணாடிகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.
இதன் துவக்க விழா டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை கோவை மாநகர போக்கு வரத்து காவல் துறை உதவி ஆணையாளர் சிற்றரசு டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்.சுனில் ஸ்ரீதர் முன்னிலையில் துவக்கிவைத்தார்.
விழாவில் முகாமை துவக்கி வைத்து டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர். சுனில் ஸ்ரீதர் பேசுகையில்,
கடந்த அக்டோபர் 1-ம் தேதி துவக்கப்பட்ட எங்களது மருத்துவமனை கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பார்வை இழப்பை தடுப்பது, கண் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை முதலியன குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும். பிறக்கும் போதே சிலர் கண் பார்வை இல்லாமல் பிறக்கின்றனர்.
பல்வேறு காரணங்களால் காலப்போக்கில் பார்வை குறைபாடு ஏற்படுவதும் உண்டு. பார்வையற்ற மக்கள் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். பிறரைச் சார்ந்தே வாழ வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.உலக சுகாதார அமைப்பின் 2002 அறிக்கையின் படி, உலகில் உள்ள 45 மில்லியன் கண்பார்வையற்றோரில் 80 விழுக்காட்டினர் 50 வயதிற்கும் அதிகமானோர் ஆவர். கண்பார்வையற்றோரில் 90 சதவீதமானோர் நாடுகளில் வாழ்கின்றனர்.
மேலும்,கண்பார்வையின்மைக்கு முக்கியமான காரணிகளான கண் புரை நோய், கண் அழுத்த நோய் போன்றவற்றுக்கு இலகுவாகவும், மலிவாகவும் சிகிச்சை அளிக்க முடியும். பன்னாட்டு அரிமா சங்கங்கள் கண்பார்வையின்மையைத் தவிர்க்க உதவும் சில பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து முதன் முதலாக 1998, அக்டோபர் 8 ஆம் நாள் உலக கண்ணொளி நாளைக் கடைப்பிடித்தது.
இந்த நிகழ்வு பின்னர் உலக சுகாதார அமைப்பின் விசன் 2020 என்ற பன்னாட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதங்களில் இரண்டாவது வியாழக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
விசன் 2020 திட்டத்தில் 2020 ஆம் ஆண்டளவில் கீழ்க்கண்ட ஏழு நோய்களால் எவரும் பார்வை இழக்ககூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அரசுகள் செயல்பட உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.
கண்புரை, கண்ணிமை உட்புற டிராகோமா, கண்ணில் நீர் வழிதல், குழந்தைகளில் பார்வைக் குறைபாடு, மங்கலான பார்வை, சர்க்கரை நோயால் விழித்திரைப் பாதிப்பு, கண் நீர் அழுத்த நோய் ஏனெனில் இவை அனைத்திற்கும் முறையான சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையாளர் சிற்றரசு பேசியதாவது :-
போக்கு வரத்து காவலர்கள் வெயில், மழை மற்றும் தூசு அதிகம் உள்ள பகுதியில் தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாஸ்மின், துணைத் தலைவர் (இயக்கம்) ஜான்சன் விஜய் மேத்யூ மற்றும் தலைமை இயக்க அதிகாரி குணசீலன் பிள்ளை மற்றும் டாக்டர் மும்தாஜ், டாக்டர் அனுஷா மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.