November 15, 2022 தண்டோரா குழு
டி.ஜி.இன்ஸ்ட்டியூட் ஆப் டிரோன்ஸ் சார்பாக மாநகர போலீசாருக்கு வழங்கப்பட்ட பயிற்சி நிறைவு பெற்ற நிலையில்,பயிற்சி முடித்த காவலர்களுக்கு சான்றிதழ்களை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.
கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டறிதலுக்கு ட்ரோன் கேமரா பயன்படுத்துவது தொடர்பாக காவலர்களுக்கு டி.ஜி.இன்ஸ்டியூட் ஆஃப் ட்ரோன்ஸ் சார்பாக இரண்டு நாள் பயிற்சி முகாம் கோவையில் நடைபெற்றது.ட்ரோன் கேமராக்களை சரியான முறையில் இயக்குவதற்கும்,அது தொடர்பான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதற்கும் மாநகரில் உள்ள இருபது காவலர்களுக்கு தேர்ந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிலையில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு கோவை காவலர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கோவை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை கண்காணிப்பதற்கு ட்ரோன் கேமராக்கள் அதிக அளவில் பயன்படுவதாக குறிப்பிட்டார்.மேலும் தற்போதைய நவீன தொழில் நுட்பத்தில் ட்ரோன் கேமரா பயன்பாடு காவல் துறையில் அதிகரித்து வருவதால் இது தொடர்பான பயிற்சிகளை இன்னும் கூடுதல் காவலர்களுக்கு வழங்க உள்ளதாக குறிப்பிட்டார்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில், டி.ஜி.இன்ஸ்ட்டியூட் ஆப் டிரோன்ஸ் நிர்வாக இயக்குனர் பிரவீன் ராஜசேகர் ,விற்பனை மேலாளர் பிரபு,இயக்குனர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.