September 6, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட நஞ்சே கவுண்டர் வீதி, டிவிஎஸ் நகரில் தனியார் ஆஸ்பிட்டாஸ் தொழில் நிறுவனமும், தனியார் இன்ஜினியரிங் தொழில் நிறுவனமும் செயல்பட்டு வந்தன. இதனிடையே இந்த தொழில் நிறுவனங்கள் மாநகராட்சி உரிமம் பெறாமலும் பொதுமக்களும் இடையூறாக நடத்தப்படுகிறது என புகார் எழுந்தது. இதனை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு அந்த தொழில் நிறுவனங்கள் இயங்க தடை விதித்து சீல் வைத்தனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு சிறு,குறு தொழில் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:
கொரோனா, ஜி.எஸ்.டி, மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜாப் ஆர்டர் சரிவு என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சிறு,குறு தொழில் முனைவோர்கள் தங்கள் தொழில்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கோவை டிவிஎஸ் நகரில் இயங்கி வந்த இரண்டு தொழிற்சாலைகள் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புகளுக்கு இடையூறாக செயல்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த இரண்டு தொழிற்சாலைகளாலும் குடியிருப்புகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் இரண்டு தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர் வேலையிழந்துள்ளனர்.இந்த தொழிற்சாலைகளை நடத்தி வந்தவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் போது தொழிற்சாலை இயந்திரங்களை வெளியில் வைத்துள்ளனர். அந்த இயந்திரங்கள் மழையில் நனைந்து வீணாகிறது. கோவை மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து முறையீட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.