July 28, 2017 தண்டோரா குழு
தமிழக டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு அளித்ததில் தவறு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
அண்மையில் பணி ஓய்வு பெற இருந்த டி.கே ராஜேந்திரனுக்கு தமிழக அரசு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவில், குட்கா ஊழல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்படும் டி.ஜி.பி ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியிருப்பது சரியல்ல எனவே ராஜேந்திரனின் பணி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது, “டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டதில் தவறு இல்லை. ராஜேந்திரன் மீதான லஞ்சப்புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் தலைமையில் விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.