August 1, 2017 தண்டோரா குழு
தமிழக அரசு மெத்தனமாக இல்லாமல், டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களைக் காக்க முழு கவனம் செலுத்த வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ”தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.சுகாதாரத்துறை அதிகாரிகள் எந்த விதமான முன் எச்சரிக்கையும் எடுக்காததன் காரணமாக இன்றைக்கு மக்கள் பாதிக்கப்படுகின்ற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் ஓரிரு பகுதியில் மட்டும் சென்று பார்த்துவிட்டு, டெங்கு காய்ச்சல் இல்லை, இது மர்மக் காய்ச்சல், மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று ஊடகத்தில் பேட்டி கொடுத்து வருகிறார்.
அவர் வருமான வரித்துறையில் சிக்கியுள்ளதால், சொந்த பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ள மத்திய அரசை அணுகுவதிலேயே கவனம் செலுத்துகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. தமிழக அரசு மெத்தனமாக இல்லாமல், டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களைக் காக்க முழு கவனம் செலுத்த வேண்டும்.”
இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.