October 6, 2017
கோவை அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் வார்டுகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் ஹரிஹரன்,அவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து அரசு மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது அரசு மருத்துவகல்லூரி டீன் அசோகன்,மருத்துவ அதிகாரிகள் , மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்,
அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க வசதிகள் இருப்பதாகவும்,கோவை, ஈரோடு,திருப்பூர்,நீலகிரி,நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நோயாளிகளும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாவும் , இதன் காரணமாக டெங்கு பாதிப்பு அதிகமாக தெரிவதாகவும் தெரிவித்தார்.
மேலும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட உடன் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் எனவும் சிறந்த முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவகல்லூரி மருத்துவமனை டீன் அசோகன்,
இரவு நேரத்தில் போதுமான மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர்.கோவை அரசு மருத்துவமனையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 23 பேரும் , வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 190 பேரும் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.