December 3, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலன் காரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
கோவை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது. அதனை கட்டுப்படுத்த டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளின் சுற்றுப்புறங்களில் தேவையற்ற பொருட்களான கப்புகள், பானைகள், உடைந்த பானைகள் தேங்காய் ஓடுகள் , பழைய டயர்கள், பாட்டில்கள் மற்றும் பீளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும், பூந்தொட்டிகளில் தண்ணீர் தேங்கா வண்ணம் பராமரித்தல் வேண்டும். தண்ணீர் சேகரம் செய்யும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளில் காற்றுபுகா வண்ணம் நன்றாக மூடி வைக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகா வண்ணம் பராமரித்தல் வேண்டும். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் வாரம் ஒருமுறை ஆய்வு மேற்கொண்டு கொசுப்புழு இல்லாத பள்ளி,கல்லூரி என சான்றளிக்க வேண்டும்.
சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வின்போது கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறிப்பட்டால் தகுந்த அபராதம் விதிக்கப்படும். கடந்த ஒருவாரத்தில் மட்டும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள். கூட்டுத்தூய்மை பணிகள் மற்றும் கொசுப்புகை அடித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.