May 6, 2017 தண்டோரா குழு
டெல்லியில் பள்ளி அருகே வாயுக்கசிவு ஏற்பட்டதில் 110 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களை பார்க்க அவர்களது பெற்றோர்கள் குவிந்ததால் அங்கு பரப்பு நிலவியது.
தெற்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள ராணி ஜான்சி சர்வோதயா கன்யா பள்ளி (அரசுப்பள்ளி) அருகே நின்று கொண்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரியில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டது.
இந்த வாயுக்கசிவால் பள்ளி மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுமார் 110 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாயு கசிந்த இடத்திற்கு விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் வாயுக்கசிவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களிடம் தொலைபேசியில் பேசியதாக டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோசாடியா தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.