October 23, 2017 தண்டோரா குழு
டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த பயணி ஒருவர் எழுதிய இறுதி கடிதத்தினை 10 கோடிக்கு ஏலம் விட திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 1912ம் ஆண்டு மிக பெரிய பிரமாண்டமான டைட்டானிக் கப்பல், இங்கிலாந்தின் சவுத் ஆம்டன் நகரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது. ஆனால், எதிர்பாராத விதமாக பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அதில் பயணம் செய்த சுமார் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஹோல்வர்சன் என்னும் வணிகர் தனது மனைவி மேரியுடன் பயணம் செய்தார். கப்பல் விபத்துக்குள்ளாகும் சில மணி நேரத்திற்கு முன்பதாக அவருடைய தாயாருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.அந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். ஆனால், அவருடைய மனைவி உயிர் தப்பினார்.
ஆனால், ஹோல்வர்சன் உடல் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அணிந்திருந்த கோட்டில், அந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டு, அவருடைய தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த கடிதம் பலரிடம் கைமாறி வந்து, தற்போது இங்கிலாந்தின் வில்ட்சயர் நகரில் சனிக்கிழமை ஏலத்துக்கு வந்துள்ளது.
அந்த கடிதம் 80,000 டாலர் மற்றும் 105,000 டாலருக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெயர் வெளியிட விரும்பாதபிரிட்டனை சேர்ந்தவர், அதை 166,000 டாலர், அதாவது இந்திய செலவாணி படி, 10 கோடி ரூபாய்க்கு அதை வாங்கினார்.
மேலும், டைட்டானிக் கப்பலின் முதல் வகுப்பில் பணி புரிந்த ஒருவரின் சாவி கொத்து, 100,215 டாலருக்கு ஏலம் போனது. சவுத் ஆம்டன் நகரில் இருந்து டைட்டானிக் கப்பல் புறப்பட்ட போது, எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படம் 31,650 டாலருக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.