April 24, 2017
தண்டோரா குழு
டைட்டானிக் கப்பலில் பணியாற்றியாவரின் பாரம்பரியமான, அலங்காரமான மேல்சட்டை ஆடை 15௦,௦௦௦ பவுண்டிற்கு ஏலம் போனது.
ஏப்ரல் 1912-ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் இங்கிலாந்து நாட்டின் சவுத் ஹம்ப்டன் என்னும் இடத்திலிருந்து அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகருக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது. ஆனால், எதிர்பார்க்காத விதமாக பனிப்பாறையில் மோதி அட்லாண்டிக் கடலில் அக்கப்பல் மூழ்கியது.
அந்த கப்பலில் முதல் வகுப்பு பணிபெண்ணாக மேபெல் பென்னெட் என்பவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு 33 வயது. டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய அந்த விபத்தின்போது, அவர் தன்னுடைய இரவு உடையின் மேல் குளிரை தாங்கக்கூடிய அந்த மேல்சட்டையை அணிந்திருந்தார் எனக் கூறப்படுகிறது.
கப்பல் மூழ்கி கொண்டிருக்கும் போது அந்த உடையுடன் உயிர்காக்கும் படகில் ஏறி அவர் உயிர்பிழைத்தார். அவர் 1976-ம் ஆண்டு தனது 96வது வயதில் உயிர் இழந்தார்.
டைட்டானிக் கப்பல் விபத்திலிருந்து தப்பிக்கும்போது அவர் அணிந்திருந்த மேல்சட்டை, இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஏலத்தில், 15௦,௦௦௦ பவுண்டிற்கு ஏலம் போனது.
“மேபெல் அணிந்திருந்த இந்த மேல்சட்டை தனித்தன்மை வாய்ந்தது. டைட்டானிக் கப்பலில் பணிபுரிந்த ஒருவருடையது என்பதால் மட்டுமல்ல, அது மிகவும் அலங்காரமான ஆடையும் கூட.” என்று ஏலம் விடுபவர் கூறினார்.