January 19, 2017
தண்டோரா குழு
அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்புக்கு “டுவிட்டர்” மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து மியாமி கடற்கரை காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (ஜனவரி 19) கூறியதாவது:
“ப்ளோரிடா நகரைச் சேர்ந்தவர் டொமினிக் ஜோசப் ப்யோபோலோ (51). அமெரிக்க அதிபராக பதவி ஏற்கவிருக்கும் டொனல்ட் டிரம்ப்புக்கு அவர்களுக்கு அனுப்பிய ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவிட்டிருந்தார். அதில், “பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டால் டொனல்ட் டிரம்ப்பைக் கொலை செய்வேன்” என கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர். ஓர் உணவு விடுதியிலிருந்து வெளியே வந்தபோது அவர் பிடிபட்டார். அவரிடம் விசாரித்தபோது, டுவிட்டர் பக்கத்தில் கொலை மிரட்டலைப் பதிவு செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கை விசாரித்த மியாமி நீதிமன்ற நீதிபதி மிண்டி க்ளாஸர் அந்த நபரின் மனநிலையைப் பரிசோதிக்கும்படி உத்தரவிட்டார்.
அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இல்லாவிட்டால், அவர் ஜாமீனில் செல்ல 1 கோடி டாலர் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.