April 23, 2016 தண்டோரா குழு
வடஇந்திய மாநிலங்களில் தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பையில் நடக்க இருந்த ஐ.பி.எல் போட்டிகள் கூட வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இந்தத் தண்ணீர் பிரச்சனை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியையும் விட்டுவைக்கவில்லை. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஹர்மு என்ற இடத்தில் உள்ள அவரது கனவு இல்லத்தில் தற்போது நீச்சல் குளம் கட்ட அனுமதி பெற்று கட்டிவருகிறார்.
இந்நிலையில் தற்போது மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் ஹர்முவிலும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.
இதையடுத்து கிருஷ்ணா சந்திர சர்க்கார் என்பவரும் மற்றும் பலரும் சேர்ந்து இப்பகுதியில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தில் நாள் ஒன்றிக்கு 15 ஆயிரம் லிட்டர் நீர் அந்த நீச்சல் குலத்திற்கு கொடுக்கக் கூடாது என வழக்குத் தொடுத்தனர்.
இந்த வலக்கை விசாரித்த ஜார்கண்ட் மாநில உயர்நீதி மன்ற நீதிபதிகள் முத்துசாமி கற்பகவிநாயகம் மற்றும் டி.கே.சின்ஹா ஆகியோர், டோனி மற்றும் ஜார்கண்ட் மாநில நிர்வாகம் ஆகியோருக்கு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
இன்று காலை அனுப்பப்பட்ட சம்மன் அவர்களைச் சென்றடைந்த பின் அவர்கள் விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் ஐ.பி.எல் போட்டிகளை மாற்றியமைத்த நிலையில் தற்போது இந்திய அணியின் கேப்டனை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.