September 19, 2017 தண்டோரா குழு
சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(செப் 19) மேல்முறையீடு செய்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.இதனைத்தொடர்ந்து, எம்எல்ஏகளிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.இந்த நோட்டீசுக்கு செப்டம்பர் 5-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் 7-ந் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் மட்டும் நேரில் ஆஜரானார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.இதனைத் தொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால், நேற்று(செப் 18) உத்தரவிட்டார்.
சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.இந்த வழக்கு மீதான விசாரணை, நாளை திமுக தொடர்ந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. இம்மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.