September 1, 2017 தண்டோரா குழு
உத்தர பிரதேஷத்தில் அரசு பள்ளியில் சேர்க்க நினைத்த தந்தையின் முடிவை எதிர்த்து மொபைல் கோபுரத்தின் மீது ஏறி சிறுமி தற்கொலை செய்துக்கொள்ள போவதாக மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேஷ் மாநிலத்தில் உள்ள பாலி கிராமத்தில் குமாரி என்னும் 14 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறாள். வியாபாரியாக பணியாற்றி வரும் அவளுடைய தந்தை, மகள் படிக்கும் தனியார் பள்ளிக்கு பணம் செலுத்த முடியாத காரணத்தால், அவளை அருகிலிருக்கும் அரசு பள்ளிக்கு மாற்ற நினைத்தார்.
முதலில் தந்தையின் எண்ணத்திற்கு குமாரி எதிர்ப்பு தெரிவித்தாள்.பிறகு அவருடைய முடிவை மாற்ற நினைத்தாள். ஆனால், அவளுடைய தந்தை தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருந்தார். கோபம் அடைந்த அவள், வீட்டிலிருந்து சிறிது தூரத்திலுள்ள மொபைல் கோபுரத்தின் மீது ஏறினாள். தன்னுடைய தந்தை முடிவை மாற்றி கொள்ளாவிட்டால், அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்தாள்.
இதைக்கேட்ட அங்கிருந்த மக்கள், உடனே காவல்நிலையத்திற்கு தகவல் தந்தனர். அதை அறிந்த காவல்நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, அவளை கீழே இறங்கும்படி கூறினர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு, தொடர்ந்து மேலே ஏறினாள்.
இந்த சம்பவத்தை அறிந்த இரண்டு உள்ளூர் அதிகாரிகள், அங்கு விரைந்தனர்.இதனைத்தொடர்ந்து அவளுடைய தந்தையிடம் பேசி, அவளை தொடர்ந்து அதே தனியார் பள்ளியில் படிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு, கீழே இறங்கினாள்.