August 5, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவன விமானத்தில் பயணித்த 5 வயது சிறுமிக்கு, அந்த விமான ஊழியர்கள் காட்டிய அன்பு பலருக்கு நெகிழ்ச்சியை தந்துள்ளது.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தின் ஒர்லாண்டோ நகரத்திலிருந்து கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் எஞ்சிலஸ் நகருக்கு சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் பயணித்துள்ளது. அந்த விமானத்தின் ஆஷ்லே ஸ்காட்ஸ் என்னும் 5 வயது சிறுமி பெற்றோருடைய துணையில்லாமல் தனியே பயணித்துள்ளாள்.
5 வயதுக்கு மேலான குழந்தைகளை பெற்றோர்கள் துணையில்லாமல் தனியே பயணிக்க அந்நிறுவனம் அனுமதிக்கிறது. ப்ளோரிடா மாகணத்தில் இருந்து கலிபோர்னியா மாகாணத்திற்கு செல்ல நேரடி விமானம் கிடையாது. அதனால், அமெரிக்காவின் ஒமஹா விமான நிலையத்தில் இருந்து மற்றொரு விமானத்தில் பயணம் செய்ய வேண்டும்.
ஒமஹா விமான நிலையத்திலிருந்து லாஸ் எஞ்சிலஸ் நகரில் இருக்கும் தன்னுடைய தாயாரை, தனது டேபிலேட் மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளாள். ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை. இதை கவனித்த அந்த விமானத்தின் ஊழியர், தன்னுடைய கைபேசியை ஆஷ்லேவுடன் கொடுத்து, அதிலிருந்து பேச சொல்லியுள்ளார். மகிழ்ச்சி அடைந்த ஆஷ்லே அவளுடைய தாயாரை தொடர்புக்கொண்டு பேசியுள்ளாள்.
விமானத்தில் ஏறுவதற்கு முன் சில உணவு பொருட்களை வாங்கியுள்ளாள். விமான ஏறிய பிறகும், அவளுக்கு பசியாக இருந்தது. இதை கவனித்த அந்த விமானத்தின் பைலட், விமானத்திலிருந்து கீழே இறங்கி, விமான நிலையத்திலிருந்த கேஎப்சி உணவகத்திலிருந்து, அவளுக்கு கேஎப்சி சிக்கன் துண்டுகளையும் உருளைக்கிழங்கு பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவையும் வாங்கி வந்து ஆஷ்லேவுக்கு தந்துள்ளார்.
ஆஷ்லே வீடு திரும்பியதும், விமானத்தில் நடந்ததை தன் தாயிடம் கூறியுள்ளாள். ஆச்சரியம் அடைந்த அவளுடைய தாயார், உடனே தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.