April 20, 2017 தண்டோரா குழு
சட்டத்தின்படி பள்ளிகள் வர்த்தகத்தை போல் செயல்படக்கூடாது மாறாக சமுக சேவை போல் நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ., அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சி.பி.எஸ்.இ. அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில்,
“சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் இயங்கும் சில தனியார் பள்ளிகள் இந்த கல்வி ஆண்டிற்கான பாட புத்தகங்கள், பள்ளி சீருடை மற்றும் இதர பொருட்களை அவர்களின் பள்ளி வளாகத்தில் தான் வாங்க வேண்டும் இல்லை என்றால் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள விற்பனையாளர்களிடமிருந்து தான் வாங்க வேண்டும் என்று பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக பெற்றோர்கள் அனுப்பிய புகார்கள் எங்களிடம் வந்துள்ளது.
1956-ம் ஆண்டு நிறுவன சட்டத்தின்படி, பள்ளிகள் வர்த்தகத்தை போல் செயல்படக்கூடாது மாறாக சமுக சேவை போல் நடத்தப்பட வேண்டும் என்றும் பள்ளிகள் வளாகத்தில் எந்த ஒரு வர்த்தக முறையும் செயல்படுத்த கூடாது என்றும் அந்த சட்டம் மிக தெளிவாக கூறுகிறது.
மாணவர்களுக்கு தரமாக கல்வியை கற்று தருவது தான் பள்ளிகளின் முக்கிய கடமையாகும். மாணவர்களின் புத்தகங்கள், குறிப்பேடுகள், காலணிகள், புத்தக பைகள், சீருடை மற்றும் கல்வி இதர பொருள்களை தங்கள் பள்ளியிலிருந்து தான் வாங்க வேண்டும் என்று பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் தவறான நடவடிக்கைகளில் பள்ளிகள் ஈடுபடக்கூடாது. இதனை தடுத்து நிறுத்துவது அவசியமாக இருக்கிறது, ” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.