September 19, 2022
தண்டோரா குழு
கோவையில் 12ம் படித்த மாணவி மாற்று சான்றிதழ் பெற ரூ.1,15,318 பணம் கேட்கும் தனியார் பள்ளி. மாற்று சான்றிதழை பெற்ற தர வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் பாமகவினர் மனு அளித்துள்ளனர்.
கோவை வீரபாண்டி பகுதியில் செயல்பட்டு வரும் விவேகம் என்ற தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஃபுளோரா ஜாஸ்மீன் என்ற மாணவி கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டு 12ம் வகுப்பு பயின்றுள்ளார். 2020ம் ஆண்டு நாடு முழுவதும் கொரனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பள்ளி கட்டணத்தை மாணவ மாணவிகள் கட்ட வேண்டியதில்லை என்று அரசு அறிவித்திருந்த நிலையில் அப்பள்ளி மாணவிக்கு ரூ.1,15,318 கட்டணம் செலுத்தினால் தான் மாற்று சான்றிதழ் வழங்க முடியும் என்று கூறியுள்ளது.
மாணவியின் பெற்றோருக்கு கொரனா காலத்திலிருந்து தற்போது வரை வேலை கிடைக்காததாலும் ஊதியம் இல்லாததாலும் மாணவியின் கல்விக்கட்டணம் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிறிது சிறிதாக தவனை முறையில் கட்டணம் கட்டச்சொல்லி மாணவியிடம் கடிதம் எழுதி வாங்கிய பள்ளி நிர்வாகம் தொடர்ந்து மாணவியின் மாற்று சான்றிதழை தர மறுப்பதோடு கட்டணம் கட்ட சொல்லி தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது.
இந்நிலையில், மாணவி தனியார் கல்லூரியில் இளங்களை பாடப்பிரிவில் சேர்ந்த நிலையில் மாற்று சான்றிதழ் இல்லாததால் மாணவி கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவலமும் ஏற்பட்டுள்ளது. மாணவியின் இந்த அவல நிலையை அறிந்த கோவை மாவட்ட பாமகவினர் மாணவிக்கு நீதி கேட்டு மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் மாவட்ட ஆட்சியரி சந்தித்து இன்று மனு அளித்தனர்.