October 1, 2021 தண்டோரா குழு
தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தன்னார்வ ரத்த கொடையாளர்கள் 40 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் அரசு ரத்த வங்கிகள் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகிய 4 அரசு மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வருகின்றது. தவிர 18 தனியார் ரத்த வங்கிகளும், 6 ரத்த சேமிப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
2020-21 ஆண்டு 4 அரசு ரத்த வங்கிகளின் மூலம் 10 ஆயிரத்து 925 யூனிட்கள் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதில் 63 ரத்த தான முகாம்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 2 ஆயிரத்து 884 யூனிட்டுகள் ரத்தம் பெறப்பட்டுள்ளது.
ரத்த தானம் செய்யும் குருதி கொடையாளரிடமிருந்து சுமார் 300 மில்லி ரத்தம் மட்டுமே பெறப்படுகின்றது. ஒவ்வொருவரும் தானமாக வழங்கும் ஒரு யூனிட் ரத்தம் மூலம் நான்கு உயிர்கள் காப்பாற்றிட இயலும். எனவே, ரத்த தானம் செய்வதற்கு பொதுமக்களிடையே போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தன்னார்வமாக ரத்த தானம் செய்வோர்களை அரசின் சார்பில் பாராட்டப்பட்டு வருகிறது.
அதன்படி, ரத்த கொடையாளர்கள் 40 பேருக்கு மாவட்ட கலெக்டரால் நேற்று பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில், அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள்) சந்திரா, மாவட்ட குருதி பரிமாற்றுக்குழு அலுவலர் மங்கையர்கரசி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.