January 4, 2017 தண்டோரா குழு
தமிழகத்திற்கு விநாடிக்கு 2000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நதிநீர் வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சேகர் நாப்தே, “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது. இதனால், தமிழகத்தில் 60 சதவீதம் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தொடர்ந்து காவிரியில் விநாடிக்கு 2000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் ” என வாதத்தை முன்வைத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, “மறுஉத்தரவு வரும் வரை தமிழகத்திற்குக் காவிரி நதியிலிருந்து விநாடிக்கு 2000 கனஅடி நீரைக் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இவ்வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 7 ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது. பிப்ரவரி 7 ம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும். தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி என ஒவ்வொரு தரப்பிற்கும் பதிலளிக்க 3 வார கால அவகாசம் வழங்கப்படும்” என்றார்.