April 24, 2023 தண்டோரா குழு
ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான இ-ட்ரீயோ, கோவையை சேர்ந்த ஈக்ரீன் பிளானட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தமிழகத்தில் அதன் முதல் எலக்ட்ரிக் சரக்கு வாகன ஷோரூமை கோவையில் இன்று துவக்கியது.இதை கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.
அமேசான், பிளிப்கார்ட், டி.எட்ச்.எல் ,போன்ற முன்னணி இ-காம் லாஜிஸ்டிக் நிறுவனங்களுக்கு சரக்கு மின்சார வாகனங்களை வழங்கி வரும் இ- ட்ரீயோ நிறுவனம் அதன் முன்னணி எலக்ட்ரிக் சரக்கு வாகனமான ‘டூரோ மேக்ஸ்++’ எலக்ட்ரிக் வாகனத்தை அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காம் லாஜிஸ்டிக்ஸ், அக்ரி-லாஜிஸ்டிக்ஸ், கேஸ் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் ஏற்றவாறு உருவாகியுள்ளது.
இது குறித்து அதன் நிர்வாக இயக்குனர் கல்யாண் சி.கோரிமெர்லா பேசுகையில்:
இது டூரோ மேக்ஸ் வகை எலக்ட்ரிக் சரக்கு வாகனத்தின் 3-வது தலைமுறை வாகனம் ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிமீ வரை செல்லலாம்.இது 550 கிலோ வரை எடையை சுமக்கும் திறன் கொண்டது.வணிக பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் லாஜிஸ்டிக்ஸ் துறை பணிகளுக்கு இந்த மின்சார வாகனங்களின் தேவை அதிகம் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம், எனவே நாங்கள் அந்த பிரிவுகளுக்கு தேவைப்படும் வாகனங்களை விற்பனை செய்ய துவங்கினோம்.
இதுவரை நாங்கள் 700 வாகனங்களை தயாரித்து உள்ளோம். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தற்போது ஆண்டுக்கு 4000 வாகனங்கள் உற்பத்தி செய்ய திறன் உள்ளது.இ- ட்ரீயோ தற்போது நாட்டில் 7 மாநிலங்களில் உள்ள 10 நகரங்களில் உள்ளது. மேலும் விரைவில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உட்பட நாடு முழுவதும் 20 நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த துவக்க விழாவில் இக்ரீன் பிளானட் சொல்யூஷன்ஸ் இயக்குநர் பிரசன்னா வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.