September 7, 2023 தண்டோரா குழு
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பீக் ஹவர் கட்டணம், நிலை கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை அருகே 3 மாவட்டங்களை சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது.இதில் தொழில் துறையினருக்கு நிலைகட்டணம் மற்றும் பீக்ஹவர் கட்டணங்களை அதிகரித்தது. இதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தொழில் முனைவோர் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால்,கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறு குறு தொழில் முனைவோர் இணைந்து தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கினர்.
இந்த அமைப்பின் சார்பில் திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது.இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் பங்கேற்றுள்ளனர்.உண்ணாவிரத போராட்டத்தின் போது நிலை கட்டணம் உயர்வு, பீக் ஹவர் கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மின்வாரியத்திடமும், ஒழுங்குமுறை ஆணையத்திடமும், தமிழக அமைச்சர்களிடமும் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அரசின் கவனத்திற்கும், தமிழக முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் விதமாக இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுவதாகவும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும் எனவும், அதுவரை தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர் வலியுறுத்தியுள்ளனர்.