April 25, 2023 தண்டோரா குழு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டமானது தேங்காய் மற்றும் கொப்பரைக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கி உள்ளது. இந்தியா, உலகின் மிகப்பெரிய தேங்காய் உற்பத்தி செய்யும் நாடு. கடந்த 2021-22-ம் ஆண்டில் 19,247 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது உலக அளவில் 31 சதவீதமாகும்.
தமிழகத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் 35.07 லட்சம் டன்கள் தேங்காய் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. தற்போது பெருந்துறை சந்தைக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, பொள்ளாச்சி, பல்லடம், சேலம், காங்கேயம், மைசூர் ஆகிய பகுதிகளில் இருந்து கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து உள்ளது. விலை முன்னறிப்பு திட்ட குழு கடந்த 15 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் பெருந்துறை வேளாண் உற்பத்தி கூட்டுறவு மையத்தில் நிலவிய தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
இதன்படி வருகிற மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை தரமான தேங்காயின் பண்ணை விலை ரூ.12 முதல் ரூ.14 வரை இருக்கும். தரமான கொப்பரையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.75 முதல் ரூ.80 வரை இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.