December 7, 2022 தண்டோரா குழு
தமிழகத்தில் வரி வசூலில் இரண்டாவது இடத்தில் கோவை மாநகராட்சி உள்ளது. ரூ.344 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில் தற்போது வரை ரூ.151 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை மாநகராட்சி சார்பில் சொத்து வரி, குடிநீர் வரி போன்ற வரியினங்கள் தீவிர வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பான முறையில் மண்டல வாரியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் ரூ.344 கோடி வரி வசூல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதில் தற்போது வரை ரூ.151 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரி வசூலில் இரண்டாவது இடத்தில் கோவை மாநகராட்சி உள்ளது.
முதல் இடத்தில் திருச்சி உள்ளது. தினமும் ரூ.1 முதல் ரூ.2 கோடி வரை வரி வசூல் செய்யப்படுகிறது. இதில் ரூ.80 லட்சம் வரை சொத்து வரி வசூல் ஆகிறது.மாநகராட்சிக்கு கிடைக்கக்கூடிய வருவாயில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகைகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி முறையாக வழங்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சியின் கடன்கள் தீர்க்கப்பட்டு வருகின்றன. சூயஸ் குடிநீர் பணிகளை பொறுத்தவரையில் இதுவரை 8 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 99 கட்ட பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு தற்போது வரை 8 கட்ட பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் மாதம் இறுதிக்குள் 21 கட்ட பணிகள் நிறைவடைந்து விடும். 250 கிமீ வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.கோவை மாநகராட்சியில் ரூ.26 கோடியில் 125 சாலை பணிகள் 38 கிமீ அளவில் 17 கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதில் 50 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. வஉசி உயிரியல் பூங்கா உரிமம் ரத்தான நிலையில் அதனை பறவைகள் பூங்காவாக மாற்ற திட்டம் ஒன்று உள்ளது. இல்லாவிட்டால் செம்மொழி பூங்கா பணி நிறைவடைந்ததும் வஉசி உயிரியல் பூங்காவிற்கான இடம் விரிவாக்கம் செய்யப்பட்டு அதற்கு ஏற்றார்போல் பூங்காவை மீண்டும் இயக்க திட்டம் ஒன்று உள்ளது. தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்பட இல்லை.
மாநகராட்சியில் உள்ள குப்பை எடுக்கும் வாகனங்களை கண்காணிக்கும் பொருட்டு 50 லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 250க்கும் மேற்பட்ட டாடா ஏஸ் வாகனங்களுக்கு விரைவில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் குப்பைகளை வாகனங்கள் முறையாக எடுக்கிறது என்பதனை மாநகராட்சி தலைமை அலுவலகத்திலேயே கண்காணிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.