April 4, 2017 தண்டோரா குழு
தமிழக விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க தமிழக அரசால் நிச்சயம் முடியாது என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க., செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசுகையில்
“சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலுக்காக அதிகாரிகள் மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச வேண்டும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்று விவசாயிகளை சந்திக்க வேண்டும். பிரச்னையை தீர்க்குமாறு பிரதமரை நேரில் சந்தித்து அவர் வலியுறுத்த வேண்டும். விவசாயிகள் பிரச்னையை தீர்க்க தமிழக அரசால் நிச்சயம் முடியாது. மக்களை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை.”
இவ்வாறு அவர் பேசினார்.