April 24, 2017
தண்டோரா குழு
புதிய பென்சன் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் தமிழக அரசு ஊழியர்கள்காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்படாத ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை நிர்யணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தமிழக அரசின் 64 துறைகளைச் சேர்ந்த 4.5 லட்சம் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காதவிட்டால் ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாகவும் தெரிவித்திருந்ததாகவும் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தமிழக அரசு இன்றே இதுகுறித்து பேச்சுவார்த்தைக்கு முன்வந்து, உடன்பாடு ஏற்பட்டுவிட்டால் கூட போராட்டத்தைக் கைவிடுவோம் என்றும் தமிழக அரசுக்கு அரசு ஊழியர்கள் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது.