October 4, 2021 தண்டோரா குழு
சட்ட விரோத மது கூடங்களை உடனடியாக மூட வேண்டும்,டாஸ்மாக் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பாக கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை வடக்கு,தெற்கு,திருப்பூர் மாவட்டம் உள்ளடக்கிய அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பாக டாஸ்மாக் கோவை வடக்கு டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில துணை பொதுச்செயலாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்ற இதில்,மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்தார்.
மாநில தலைவர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் கோவை வடக்கு தெற்கு மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
இதில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்,அதிரடி ஆய்வு என்ற பெயரில் டாஸ்மாக் பணியாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், அரசியல்வாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் அத்துமீறிய செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும், சட்டவிரோத மதுக்கூடங்களை உடனடியாக மூட வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் சுப்ரமணியம்,சிங்கார வடிவேலு,ராமானுஜம், இன்னாசி முத்து,ரங்கநாதன் உட்பட சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.