September 27, 2017 தண்டோரா குழு
தமிழக மருத்துவ கல்லூரி இயக்குனராக எட்வின் ஜோ தற்காலிகமாக தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் மருத்துவர் ரேவதி கயிலைராஜன். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக உள்ளார். இந்நிலையில், இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், மருத்துவக்கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்படும் ஒருவர் 2 ஆண்டுகள் டீனாக பணிபுரிந்திருக்க வேண்டும். பணி மூப்பு பட்டியலில் முதலிடத்தில் இருக்க வேண்டும். பணியில் இருந்து ஓய்வு பெற குறைந்தபட்சம் ஒரு ஆண்டு இருக்க வேண்டும். ஆனால் விமலா ஓய்வு பெற 7 மாதங்கள் மட்டுமே உள்ளது. மருத்துவ கல்வி இயக்குனராக நியமனம் செய்வதற்கு எனக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. எனவே என்னை அந்தப்பதவியில் நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்”
இவரது வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, மருத்துவக் கல்வி இயக்குனர் பதவி முக்கியமான பதவி. இப்பதவி வகிப்பதற்கு தகுதி, திறமை அவசியம். விமலா நியமனம் விதிப்படி நடைபெறவில்லை. இருப்பினும் விமலா ஓய்வு பெற்று சென்றுவிட்டார். இதனால் மனுதாரர் கேட்கும் நிவாரணம் வழங்க முடியாது.
மருத்துவக் கல்வி இயக்குனர் பணியிடம் காலியாக இருப்பதால் அந்த பதவிக்கு தகுதியானவர்களை நியமனம் செய்ய வேண்டும் இந்த நியமனம் சட்டப்படியும் நடைபெறும் என நம்புகிறோம் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்திரவிட்டனர்.
இந்த உத்தரவுக்கு பிறகு மருத்துவ கல்வி இயக்குனராக எட்வின்ஜோ நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்த்து ரேவதி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், எட்வின்ஜோ தன்னை விட 7 ஆண்டுகள் பணிக்கு இளையவர். இதனால் மருத்துவ கல்வி இயக்குனராக என்னை தான் நியமனம் செய்திருக்க வேண்டும். எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்து, என்னை அந்தப்பதவியில் நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரைக்கிளை நீதிபதி கடந்த 20 ஆம் தேதி,” எட்வின் ஜோ நியமனம் விதிப்படி நடைபெறவில்லை. எனவே மருத்துவ கல்வி இயக்குனராக ரேவதி கயிலைராஜனை உடனடியாக மருத்துவ கல்வி இயக்குனராக நியமித்து சுகாதாரத்துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இந்நிலையில் தனிநீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசுத்தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், சுந்தர் அடங்கிய அமர்வு, வழக்கில் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டு, இது குறித்து ரேவதி கயிலை ராஜன் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.