March 6, 2017 தண்டோரா குழு
மத்திய அரசுக்கு நேரடியாக அழுத்தம் கொடுத்து, இலங்கை சிறையில் உள்ள 85 தமிழக மீனவர்களையும், 128 படகுகளையும் மீட்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது;
“தமிழக மீனவர்களைத் தாக்குவதும், கைது செய்வதும், அவர்களது மீன்பிடி படகுகளைப் பறிமுதல் செய்வதுமான அராஜகத்தில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதே போல் மார்ச் 5-ம் தேதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஜெகதாம்பட்டினம் மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை அரசின் இந்தச் செயலும் அதனைத் தட்டிகேட்காத மத்திய அரசின் நிலையும் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கை அரசின் பிடிவாதத்தால் இலங்கை சிறைகளில் வாடும் 85 மீனவர்களும், 128-க்கும் மேற்பட்ட படகுகளும் விடுவிக்கப்படவில்லை. அவர்களின் குடும்பங்கள் தாங்க முடியாத துயரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
வாழ்வாதாரத்திற்குப் பணமில்லாமல், குழந்தைகளைப் பள்ளிக்குக் கூட அனுப்ப முடியாமல் அந்த குடும்பங்கள் எல்லாம் தடுமாறி நிற்பதை தமிழக அரசும், மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது வேதனையாக இருக்கிறது.
மத்திய அரசுக்கு நேரடியாக அழுத்தம் கொடுத்து, இலங்கை சிறையில் உள்ள 85 தமிழக மீனவர்களையும், 128 படகுகளையும் மீட்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடிதம் எழுதுவதோடு தன் பணி முடிந்து விட்டது என்று இருக்காமல் மீன்வளத் துறை அமைச்சரை உடனடியாக தில்லிக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களைச் சந்தித்து தூதரக முயற்சிகளை முடுக்கி விட்டு மீனவர்களையும், படகுகளையும் கால தாமதம் செய்யாமல் விடுவிக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள்தானே என்று மவுனம் சாதிக்காமல் மத்திய அரசும் உடனடியாக வெளியுறவுத் துறை மூலம் நடவடிக்கை எடுத்து, தூதரக ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து கைதான மீனவர்களையும், படகுகளையும் உடனே மீட்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்”
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.