July 25, 2017 தண்டோரா குழு
விவசாயிகளுக்கு வரும் தொலைபேசி மிரட்டல்கள் குறித்து தமிழக முதல்வரிடம் கூறியபோது, அவர் மவுனமாக இருந்தார் என்று விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு கூறினார்.
தில்லியில் குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் சந்தித்தனர்.
அதன் பின்னர் போராட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“கூட்டுறவு கடன் வசூலுக்காக விவசாயிகளை துன்புறுத்தக் கூடாது என வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகதமிழக முதல்வர் எங்களிடம் தகவல் தெரிவித்தார்.தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை மத்திய அரசு தான் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதால் அப்பிரச்சனையை எம்.பி.,க்களை வைத்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்.
போராடி வரும் விவசாயிகளுக்கு வரும் தொலைபேசி மிரட்டல்கள் குறித்து தமிழக முதல்வரிடம் கூறினோம். இதை கேட்டு அவர் மவுனமாக இருந்தார். இது எங்கள் பரிதாப நிலையை காட்டுகிறது.
மத்திய அரசை எதிர்த்து போராட்டம் தொடரும். விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது மத்திய அரசின் கடமை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.