March 24, 2017 தண்டோரா குழு
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நடிகர் விஷால், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் நேரில் சந்தித்தனர்.
தமிழக விவசாயிகள் தலைநகர் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் காவிரி மேலாண்மை அமைப்பது, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை, நடிகர்கள் விஷால் ,பிரகாஷ் ராஜ், கார்த்தி மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரவித்தனர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,
கடந்த சில நாட்களாக விவாசயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒரு நடிகனாக பத்து விவசாயிகளின் கடனை தீர்க்க முடியும் ஆனால், ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் துயர் துடைக்க அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் கூறுகையில்,
தமிழக விவசாயிகள் பாரபட்சத்துடன் பார்க்கப்படுவதாகவும், விவசாயிகள் பிரச்னை சம்பந்தப்பட்டவர்களுக்குச் செல்லும் வகையில் அந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினார்.