April 6, 2023
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை,கடலூர் ,அரியலூரில் பகுதிகளில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத் திட்டங்களுக்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொங்கு மண்டல விவசாயிகளும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் செயல் தலைவர் என்.எஸ்.பி வெற்றி நம்மிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டின் உணவுக் களஞ்சியமாக திகழும் டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்கம் என்ற பெயரில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரை கபளிகரம் செய்து வருகிறது.வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாக இப்போது நிலக்கரி சுரங்கத் திட்டங்களுக்காக மேலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரை டெல்டா மாவட்டங்களில் எடுக்க முனையும் மத்திய அரசின் இந்த அறிவிப்பு வேளாண் மண்டலத்தை பாலைவனமாக மாற்றும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடும்.
மத்திய அரசு முன்பு அடுத்தடுத்து அறிவித்த ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் காவிரி டெல்டா பகுதிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்தன. அந்தத் திட்டங்களுக்கு எதிராக மிகப் பெரும் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டதன் விளைவாகவே காவேரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.அத்தகைய வளம் மிக்க பகுதிக்கு நிலக்கரி சுரங்கங்கள் வாயிலாக மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை தமிழக மக்கள் கடுமையாக எதிர்த்து போராடி தடுப்போம் என்பதை மத்திய அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழர் நிலத்தையும் உழவர் நலனையும் காக்க மாநில அரசு உறுதியாக எதிர்ப்பு தெரிவித்து போராட வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.